

'பசுமையான ஒரு தேசம்' தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கைப் புரட்சி- 2022 ஆரம்ப நிகழ்வானது 29.03.2022ம் திகதி எமது பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அராலி மேற்கு (J/ 160) கிராம அலுவலர் பிரிவில் கிராம அலுவலரின் தலைமையில் ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்கள்,விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய போதனாசிரியர், கிராம மட்ட உத்தியோகத்தர்களான கிராமஅலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோருடன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரின் பிரதிநிதிகள், சமய அனுஷ்டானங்களை மேற்கொள்ளும் பொருட்டு அப்பிரதேச மதகுரு, சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்,வீட்டுத் தோட்டப் பயனாளிகள், பொதுமக்கள்ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் பிரதேச செயலாளர் அவர்களின் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. சுமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து நாற்றுக்கள், விதைப் பொதிகள் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று தொடர்ந்து வீட்டுத் தோட்ட பயனாளி ஒருவரின் இல்லத்தில் மு.ப. 9.18 மணிக்கு வடக்கு நோக்கி நாற்றுக்கள் நடப்பட்டன. மேலும் மதகுரு அவர்களின் ஆசிச் செய்தியை தொடர்ந்து பிரதேச செயலாளர், ஒருங்கிணைப்புக் குழு பிரதிநிதிகள் ஆகியோரின் உரை இடம்பெற்றது. விவசாய போதனாசிரியர் அவர்களினால் வீட்டுத் தோட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. இறுதியாக சமூகமட்ட அமைப்பின் பிரதிநிதி ஒருவரின் நன்றியுரையுடன் ஆரம்ப நிகழ்வு இனிது நிறைவு பெற்றது.
இவற்றின் பதிவுகள் சில.........






சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எமது பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்திப் பிரிவினர், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவியுடன் நடாத்தப்பட்ட விற்பனை கண்காட்சி நிகழ்வு 07.03.2022 அன்று மு.ப 10.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வானது எமது பிரதேச செயலாளர் திருமதி. பிறேமினி பொன்னம்பலம் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பெண் சிறுதொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டதோடு, "கண்ணியம் மிக்க பெண்ணியத்தை போற்றுவோம்" எனும் தொனிப்பொருளில் வீதி நாடகமும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் பதிவுகள் சில...







கிராம அலுவலர்களுக்கான முகாமைத்துவ போட்டி மாவட்ட மட்ட விருது வழங்கும் நிகழ்வானது 09.03.2022 அன்று 2.00 மணியளவில் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு விருதுகளை பெற்றுக்கொண்ட எமது பிரதேச செயலக கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலகத்தின் சார்பில் எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.






இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74வது சுதந்திர தின நிகழ்வு (04.02.2022) 8.19 மணிக்கு எமது பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலாளர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது. சுதந்திர தினத்தினை முன்னிட்டு பிரதேச சுற்றுப்புறச் சூழலில் மரங்கள் நாட்டப்பட்டதுடன், எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் சிரமதானமும் மேற்கொள்ளப்பட்டது.


















